மாணவர்களை தொழில் முனைவோராக்க 'நிமிர்ந்து நில்' திட்டம் துவக்கி வைப்பு
மாணவர்களை தொழில் முனைவோராக்க 'நிமிர்ந்து நில்' திட்டம் துவக்கி வைப்பு
UPDATED : ஜூலை 17, 2025 04:58 AM
ADDED : ஜூலை 17, 2025 12:34 AM

சென்னை:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி, பரிசளிப்பு விழா, சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற, 50 பள்ளிகளின் மாணவர் அணிக்கு, 31 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் விருதுகளை, அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
புதிய கண்டுபிடிப்புகள்
மேலும் அவர், உயர் கல்வி பயிலும் மாணவர்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10,000 பேரை தொழில் முனைவோர்களாக உருவாக்க, 'நிமிர்ந்து நில்' திட்டத்தையும், தொழில் முனைவு பயிற்சி பெற்று, தொழில் நிறுவனங்கள் துவக்கியவர்களின் தயாரிப்புகளை இணையதள சந்தையில் விற்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய கருவி, கப்பல் ஊழியர் பாதுகாப்பு பெல்ட், அறுவடை கருவி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்று இருந்தன.
நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
உலக நாடுகளுடன் நாம் போட்டி போடுவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்.
அத்தகைய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, தமிழகத்தில் உள்ள புத்தாக்க சிந்தனை கொண்ட இளைஞர்களை கண்டறிந்து, ஊக்கப்படுத்த, 2001ல் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் துவக்கப்பட்டது.
புத்தாக்க சிந்தனை உடைய இளைஞர், மாணவருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக மாவட்ட தலைநகரம், கல்லுாரி, பள்ளிகளில் தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள், கல்வியில் மட்டும் அல்லாமல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10,000 மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்க, 'நிமிர்ந்து நில்' திட்டம், 19.57 கோடி ரூபாயில் இந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
செயற்கை நுண்ண றிவு
இரண்டாம், மூன்றாம் நகரங்களில், 9,000 நபர்களுக்கு, 2 கோடி ரூபாயில் மின் வணிகம், செயற்கை நுண்ணறிவு உட்பட, 16 தொழில் முனைவோர் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், துறை செயலர் அதுல் ஆனந்த், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் அம்பலவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.