இன்றே தேர்தல் பணியை துவக்குங்கள்; மா.செ.,க்களை உசுப்பிய ஸ்டாலின்
இன்றே தேர்தல் பணியை துவக்குங்கள்; மா.செ.,க்களை உசுப்பிய ஸ்டாலின்
ADDED : ஜூன் 08, 2025 03:04 AM

சென்னை : 'தமிழகத்தின் ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பகுதியிலும் குறைந்தது, 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினராக்கும் இலக்கை நிறைவேற்றி, சட்டசபை தேர்தல் பணியை இப்போதே துவங்க வேண்டும்' என, தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
வரும் 2026 ஏப்ரலில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதற்காக, உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் என, கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணிகளில், முக்கிய அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
கடந்த 1ம் தேதி மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், தமிழகத்தின் ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பகுதியில் உள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம், 30 சதவீதம் பேரை, தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக, மாவட்டச் செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்களுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று, ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், “வரும் சட்டசபை தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும். 7வது முறையாக தி.மு.க., ஆட்சி அமைத்தது என்ற வரலாறு படைக்க வேண்டும்.
''அதற்கு ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 30 சதவீத வாக்காளர்களை, தி.மு.க., உறுப்பினர்களாக்கும் இலக்கை எட்ட வேண்டும்; அதன் வாயிலாக, தேர்தல் பணிகளை துவங்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.