மாநில கல்வி கொள்கை தனித்துவ அடையாளம் பள்ளிக்கல்வி துறை விளக்கம்
மாநில கல்வி கொள்கை தனித்துவ அடையாளம் பள்ளிக்கல்வி துறை விளக்கம்
ADDED : ஆக 13, 2025 04:05 AM
சென்னை: 'மாநில கல்விக் கொள்கை, தமிழகத்தின் தனித்த அடையாளம்' என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட, மாநில கல்விக் கொள்கையி ல், ஒரு சில அம்சங்களை தவிர, பெரும்பாலானவை 'தேசிய கல்விக்கொள்கையின் நகல்; தொலைநோக்கு பார்வை இல்லாதது; தமிழக பெற்றோர், ஆசிரியர், மாணவர் தரவுகளை, மத்திய அரசிடம் கண்மூடித்தனமாக வழங்குவது' என, பல்வேறு வி மர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள விளக்கம்:
ஆசிரியர்கள், குழந்தை உரிமை அமைப்புகள், கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின், மாநில கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், மும்மொழி கொள்கைக்கு மாற்றாக, இரு மொழிக்கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்ட, மதிய உணவு திட்டம், இலவச பாடநுால், சீருடைகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
மேலும், எண்ணும் எழுத்தும் திட்ட விரிவாக்கம், தொழிற்பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களை சேர்ப்பது, வகுப்பில் டிஜிட்டல் வசதிகளை சேர்ப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
சமூக, பொருளாதாரத்தில், பின்தங்கிய பகுதி பள்ளிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனத்தை உறுதி செய்து, சமூக நீதியை பாதுகாக்கிறது. இக்கொள்கை தமிழகத்தின் தனித்துவ அடையாளமாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.