மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று 'ஸ்டிரைக்'
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று 'ஸ்டிரைக்'
ADDED : டிச 07, 2024 01:53 AM
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி இன்று (டிச.7) ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க செயலாளர் சகாயம் தலைமையில் நடந்தது. இதில் டிசம்பரில் மீன்பிடிக்கச் சென்ற இரு படகை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து 14 மீனவர்களை கைது செய்ததை கண்டித்தனர். மீனவர்களையும், படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இலங்கை வசமுள்ள படகுகள், சிறையில் வாடும் மீனவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானத்தில் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் சேசு, எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.