மாநிலம் முழுதும் 65.12 லட்சம் மாணவர் பஸ் பாஸ் விண்ணப்பம்
மாநிலம் முழுதும் 65.12 லட்சம் மாணவர் பஸ் பாஸ் விண்ணப்பம்
UPDATED : நவ 21, 2026 06:27 PM
ADDED : நவ 21, 2026 06:27 PM
திருப்பூர்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றியுள்ள தகவல்களின் படி, மாநிலம் முழுதும், 65.12 லட்சம் மாணவர்கள் பஸ்பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, போக்குவரத்து கழக இலவச பஸ்பாஸ் வழங்குகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பஸ்பாஸ் ஸ்மார்ட்கார்டு வடிவில் முதல்வர் விஜய் படத்துடன் வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஜூலை முதல் மூன்று கட்டங்களாக காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பள்ளியில் இணைந்த மாணவர்கள், பஸ்பாஸ் தேவைப்படும் மாணவர் விபரம் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வந்தது.
நவ., முதல் வாரம் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘20ம் தேதிக்குள் ‘எமிஸ்’ தளத்தில் பஸ் பாஸ் பெற போகும் மாணவர் விவரத்தை தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும். இதை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இனி அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், தமிழகம் முழுதும் நவ. 20 மாலை வரை பஸ்பாஸ் கேட்டு, 65.12 லட்சம் மாணவர் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ் பாஸ் எத்தனை பேர் பெற போகின்றனர் என்பதை இறுதி செய்யும் பணி கல்வியாண்டு துவங்கி, ஐந்து மாதங்களாக நடந்துள்ளது. நடப்பாண்டு, நிறைவு பெற இன்னும், 40 நாள் மட்டுமே உள்ளது. டெண்டர் பணி இறுதி செய்யப்பட்டு, ஸ்மார்ட் கார்டு பிரின்ட் செய்யப்பட்டு, ஜனவரிக்குள் வழங்கப்படுமா என பெற்றோர், மாணவர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
