மாணவர்கள் குறுக்கு வழியை தேடக்கூடாது: துணை ஜனாதிபதி
மாணவர்கள் குறுக்கு வழியை தேடக்கூடாது: துணை ஜனாதிபதி
ADDED : நவ 21, 2026 10:45 PM
சென்னை: ‘‘குறுக்கு வழித்தேடல், புதைகுழிக்கு தள்ளிவிடும்,’’ என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, கொட்டிவாக்கத்தில் இன்று (நவ.,21) நடந்த, நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, 42ம் ஆண்டு தொடக்க விழாவில், அவர் பேசியது:
நாட்டுக்கு நல்லது செய்த தலைவர்களை, நாம் நினைத்து பார்க்க வேண்டும். காமராஜர் முதல்வராக இருந்தபோது, தனக்காக எதையும் நாடாதவர். இந்தியாவிலே முதன் முறையாக, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த பெருமைக்குரியவர்.
இந்திய கல்வியில், புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, செயல்முறை ஆகியவற்றில், உலகளவில் போட்டியிட, நம் கல்வி சிறந்து விளங்க வேண்டும். கலாசாரம் பாதுகாக்கப்பட்டால்தான், மனிதன், மனிதனாக இருப்பான். அறிவியல், கலாசாரம் இரண்டும் தேவை.
வரும், 2047ல் இந்தியாவை பொருளாதாரத்தில் முதல் நாடாக்கும் நோக்கத்துடன், பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இளம் தலைமுறையினர் வேகத்தை பார்த்தால், 2037ம் ஆண்டிலேயே அது சாத்தியமாகிவிடும்.
முன்னாள் ஜனாதிபதி கலாம் கூறியதுபோல, மாணவர்கள் கனவு காண வேண்டும். குறுக்கு வழித்தேடல், புதை குழிக்கு தள்ளிவிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
