ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழப்பு; இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு
ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழப்பு; இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு
ADDED : ஜூலை 15, 2025 06:45 AM

சென்னை; அலட்சியமாக செயல்பட்டு, சண்டை பயிற்சியாளரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது, நாகை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரஜினி நடித்த, 'கபாலி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர், நடிகர்கள் ஆர்யா, தினேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 10ம் தேதியில் இருந்து, இப்படத்திற்கான படப்பிடிப்பு, நாகை மாவட்டத்தில் கீழ்வெண்மணி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில், கார் பந்தயம் போன்ற சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
கார் சீறிப் பாய்வது போன்ற காட்சிகளை, காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தைச் சேர்ந்த, சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், 52, என்பவர் படமாக்கினார். அப்போது, சீறிப் பாய்ந்த காரை அவரே ஓட்டினார். கார் தலைகீழாக கவிழும் போது, மோகன்ராஜ் கீழே குதித்த போது உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக செயல்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பா.ரஞ்சித் மற்றும் படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ராஜ்கமல், வினோத் உள்ளிட்ட நான்கு பேர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.