எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் 'சுபிக்ஷா சுகாதார அட்டை' திட்டம் துவக்கம்
எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் 'சுபிக்ஷா சுகாதார அட்டை' திட்டம் துவக்கம்
ADDED : ஆக 25, 2025 01:14 AM

சென்னை: எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், ஒரு லட்சம் பேர் பயனடையும் வகையில், 'சுபிக்ஷா சுகாதார அட்டை' வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுஉள்ளது.
இது தொடர்பாக, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கை:
எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி, 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற தலைப்பில், 'சுபிக்ஷா சுகாதார அட்டை' வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில், ஒரு லட்சம் பேர் நேரடியாக பயனடைவர்.
மக்கள் எந்த சமூக பின்னணியோ, வருமான நிலையோ உடையவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இணை வேந்தர் பி.சத்தியநாராயணா கூறுகையில், ''மருத்துவ சேவை என்பது நோய்களை குணப்படுத்துவதில் மட்டுமல்லாது, உயிர்களையும் காப்பாற்றுகிறது. இந்த வகையில் சுபிக்ஷா சுகாதார அட்டை, சிகிச்சையுடன் மனித நேயத்தையும் இணைத்து செல்கிறது,'' என்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் கூறுகையில், ''இந்த அட்டையை பயன்படுத்தி, 24 மணி நேர அவசர சிகிச்சை முதல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை, இலவச கிராமப்புற சுகாதார முகாம்கள் முதல் முழுமையான தாய் பராமரிப்பு வரை, அனைத்து சேவைகளையும் பெறலாம்,'' என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.