sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: அண்ணாமலை

/

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: அண்ணாமலை

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: அண்ணாமலை

அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: அண்ணாமலை


ADDED : டிச 14, 2024 11:16 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:“அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம்,” என, தமிழக பா.ஜ., தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை கூறினார்.

'தினமலர்' நாளிதழும், 'வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன்' நிறுவனமும் இணைந்து, 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' என்ற நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தின.

அதில், 'அரசு பணி சாத்தியமே' என்ற தலைப்பில், அண்ணாமலை பேசியதாவது:

'தினமலர்' நடத்தும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, தமிழக அளவில் மிக முக்கியமானது. அரசு பணியில் சேர வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், நாட்டின் முன்னேற்றத்தில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த 25 ஆண்டுகள்


ஓர் இலக்கை அடைய வேண்டுமானால், அதற்கான முயற்சியை, ஒரு இடத்தில் துவங்க வேண்டும். 'தினமலர்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள், சிவில் சர்வீசஸ் முயற்சியை துவக்கி இருக்கின்றனர்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், மூன்று மாதம் படித்தபோது, அங்குள்ளவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அவர்கள் இந்தியாவின் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கானது. இந்த காலகட்டத்தில் சீனா, ஜப்பானை போல, இந்தியாவும் வளரப் போகிறது.

வளரும் நாடு என்பதிலிருந்து, வளர்ச்சி அடைந்த நாடு என்ற மாற்றத்தில், இந்தியா அடியெடுத்து வைக்கும்போது, இன்றைய மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர இருக்கின்றனர்; இதுவொரு அரிய வாய்ப்பு.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, சிவில் சர்வீசஸ் மீதான கனவு, இளைஞர்களுக்கு அழியாமல் இருந்து வருகிறது. இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வருகிறது; 4 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தொட்டிருக்கிறோம். மத்தியில் நிலையான ஆட்சி இருப்பதே இதற்கு காரணம். உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளன.

ஒரு காலத்தில், 'ஐ.ஏ.எஸ்., ஆகிவிட்டால் போதும்; 35 ஆண்டுகள் யாரும் கேள்வி கேட்க முடியாது' என்ற நிலை இருந்தது.

இப்போது சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், தினமும் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஏதாவது துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விருப்பு, வெறுப்பு


சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள், முழுதுமாக நாட்டுக்கு தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். விருப்பு, வெறுப்பு என்பதே இருக்கக் கூடாது.

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என, இந்தியாவின் எந்த பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். சொந்த மாநிலத்தில்தான் பணியாற்றுவேன் என்ற மனநிலையில் இருந்தால், தேர்வுக்கு தயாராவதிலேயே, 20 சதவீதம் அளவுக்கு தேக்க நிலை ஏற்படும்.

'எதையும் கிரகிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டால், எதுவுமே சாத்தியமே' என ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளதை, அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு, தோல்வி என்பதே கிடையாது.

அறிவுத் திறன்


வென்றால் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள் கிடைக்கும். இல்லையெனில், பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எங்கேயும் கிடைக்காத அறிவுத் திறன், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும்போது கிடைக்கும். எனவே, கவலைப்படாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

இத்தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமா என்று பலரும் கேட்கின்றனர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், கண்டிப்பாக வெற்றி பெற முடியும். தன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், எதிலும் வெற்றி பெற முடியாது.

இந்த தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டால், அதற்கு முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும். உறவினர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூட செல்லாமல், முழு கவனமும் சிவில் சர்வீசஸ் தேர்வில் மட்டுமே இருக்க வேண்டும்.

எதற்கெல்லாம் மதிப்பெண் கிடைக்காதோ, அந்த விஷயங்களில் ஈடுபடவே கூடாது. 24 மணி நேரத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அரசு பணிக்கு வந்து விட்டால், 35 ஆண்டுகள் என்ன செய்ய போகிறீர்களோ, அதைத்தான் தேர்வுக்கு தயாராகும்போது கற்றுக் கொள்கிறீர்கள். இதை புரிந்து படிக்க வேண்டும். எதிர்மறையாக சிந்திக்காமல், 'என்னால் முடியும்' என்று நம்புங்கள். இதையெல்லாம் செய்தால் அரசுப் பணி சாத்தியமே.

300க்கு 240


கடந்த 2008 நவ., 26ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தான், எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. லக்னோ ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிக்கும்போது, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, ஐ.பி.எஸ்., ஆக தேர்வானேன்.

நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, வாஜிராம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., இயக்குனர் ரவீந்திரன், எனக்கு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தினார்.

'உங்களது உண்மையான இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள். நேர்முகத் தேர்வில், 300க்கு 210 மதிப்பெண் கிடைக்கும்' என்று, எனக்கு அறிவுரை வழங்கினார். அவரது இந்த சொற்கள், எனக்கு பெரும் ஊக்கமளித்தன. அதனால், 300க்கு 240 மதிப்பெண் பெற்று, ஐ.பி.எஸ்., தேர்வானேன்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதிக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






      Dinamalar
      Follow us