ADDED : நவ 16, 2025 12:39 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை அப்பாவு நேற்று துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, ''பீஹார் தேர்தல் வெற்றிக்குப் பின், வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது; தமிழகத்திலும் அது தொடரும்'' என பா.ஜ., தரப்பினர் கூறி வருகின்றனர். அப்படியெல்லாம் சொல்வதற்கு பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை.
''காரணம், மத்திய அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா என்ன செய்கிறார் என்பதை சொல்ல வேண்டும். மத்திய ராணுவ அமைச்சரின் மகனும் அரசியல் தான் செய்கிறார். பா.ஜ.,வில் மொத்தமாக 287 வாரிசுகள் முக்கிய பதவியில் இ ருக்கின்றனர்.
''இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.,வினர், ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க., பற்றி குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை,'' என டென்ஷனாக கூறினார்.
தி.மு.க.,வில் பெரும்பாலான மூத்த தலைவர்கள், தங்கள் வாரிசுகளுக்கு கட்சிப் பதவிகளை வாங்கி உள்ளனர். அதுபோல, அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு, ஏற்கனவே, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி செயலராக இருந்தார். தற்போது, வள்ளியூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராக இருக்கிறார். அதனால் தான், வாரிசு அரசியல் கேள்விக்கு அப்பாவு டென்ஷன் ஆனதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேட்டியளித்த அப்பாவு, “பீஹார் தேர்தலில், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ் கட்சி' தோல்வி அடைந்துள்ளது.
அவரைப் பொறுத்தவரை, அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் மட்டும் தான். அவருக்கு, அரசியல் களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை, அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை,” என்றார்.

