'சிட்டிங்' தொகுதியை பறிக்க திட்டம் தி.மு.க., கூட்டணியில் திடீர் குழப்பம்
'சிட்டிங்' தொகுதியை பறிக்க திட்டம் தி.மு.க., கூட்டணியில் திடீர் குழப்பம்
ADDED : பிப் 18, 2025 08:19 PM
திருச்சி:தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல்சமது, திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில், அத்தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடப் போவதாக டாக்டர் கலையரசன் என்பவர், ரகசிய கூட்டம் போட்டு ஆதரவு திரட்டத் துவங்கி உள்ளார். இது, மனித நேய மக்கள் கட்சியினரை எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு, பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், மணப்பாறை தொகுதியில் ம.ம.க.,வின் பொதுச்செயலர் அப்துல்சமது வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
இந்நிலையில், வரும் 2026 தேர்தலுக்கும், மணப்பாறை தொகுதியில் போட்டியிட மனித நேய மக்கள் கட்சியினர் தயாராகி வரும் சூழ்நிலையில், தி.மு.க.,வும் போட்டியிட தயாராகி வருவது, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து, ம.ம.க.,வினர் கூறியதாவது:
மணப்பாறையைச் சேர்ந்த பிரபல டாக்டர் கலையரசன் என்பவர், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். அண்மையில், 100க்கும் மேற்பட்ட டாக்டர்களை அழைத்து, ரகசிய கூட்டம் நடத்தினார்.
'இம்முறை நான் தான், மணப்பாறை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறேன்; அனைவரும் ஆதரவு தர வேண்டும்' என்று கூறியுள்ளார். அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருக்கும் கலையரசன், மேலிடத்தின் அனுமதியின்றி இப்படியெல்லாம் கூட்டம் போட்டு ஆதரவு கேட்க வாய்ப்பில்லை. கூட்டணிக்குள்ளேயே குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ம.ம.க.,வின் பொதுச்செயலராக இருக்கும் அப்துல்சமது போட்டியிட்டு வென்ற தொகுதியில் தி.மு.க., எப்படி போட்டியிடும் என தெரியவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸிடம் இருந்து எடுத்தது போல, தி.மு.க., மணப்பாறையையும் எடுத்துக் கொண்டால், கூட்டணியில் தொடருவது குறித்து ம.ம.க., தலைமை பரிசீலனை செய்யும்.
இவ்வாறு அக்கட்சியினர் கூறினர்.