ADDED : நவ 15, 2024 06:48 AM

பாதுகாப்பான பயணத்திற்கு அனைவரும் விரும்புவது ரயிலையே. ஆனால் ரயில்வேயின் இணையதளம் படுத்தும்பாடு பயணத்தின் மீது வெறுப்பையே உருவாக்குகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தபின் ரயில்வேதுறையில் புரட்சி நடந்து வருகிறது. புதிய ரயில்கள், வழித்தடங்கள், வடிவமைப்பு என ரயில்வே சாதனை படைத்து வருகிறது. ஆனால் டிக்கெட் முன்பதிவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறை தொடர்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இணையதள பயன்பாடு அதிகரித்து வருவதால் ரயில்வே டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு அதிகரித்து வருகிறது. இதுவரை முன்பதிவுக்கான காலம் 120 நாட்கள் என இருந்ததை நவம்பர் 1 முதல் 60 நாட்களாக ரயில்வே குறைத்துள்ளது. இது வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தட்கல் முன்பதிவு முன்பை விட சிக்கலானதாக மாறிவிட்டது.
பயணத்திற்கு முதல்நாள் தட்கலில் முன்பதிவு செய்யலாம். முன்பு காலை 10:00 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்குமான தட்கல் முன்பதிவு துவங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதை மாற்றி ஏ.சி. உள்ளிட்ட உயர் வகுப்புகளுக்கு காலை 10:00 மணிக்கும், படுக்கை வசதி முன்பதிவுக்கு காலை 11:00 மணி எனவும் மாற்றப்பட்டது.
அதன்பின் சில நாட்கள் முன்பதிவு பிரச்னையின்றி நடந்தது. தற்போது தட்கலில் டிக்கெட் எடுப்பது இமாலய சாதனையாக மாறிவிட்டது. படுக்கை வசதி பெட்டிகளுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டால் அவர்களை பெரும் அதிர்ஷ்டசாலிகளாக கருத வேண்டியுள்ளது.
ஏன் இந்த பிரச்னை
பயணிகள் பயன்பாடு அதிகரித்த அளவிற்கு ரயில்வே இணையதளத்தின் வேகம் அதிகரிக்கவில்லை. காலை 11:00 மணிக்கு இணையதளத்திற்குள் நுழைவதே பிரம்ம பிரயத்தனமாக உள்ளது. அப்படி உள்ளே நுழைந்துவிட்டாலும் முன்பதிவுக்கு பெயர்களை பதிவு செய்துவிட்டு சப்மிட் செய்தால் இணையம் சுற்றிககொண்டே இருக்கிறது. அதன்பின் உள்ளே சென்றபின் கேப்சா கேட்கிறது. அந்த கேப்சாவை உள்ளிட்டபின் மீண்டும் சுற்றல். இடையில் கேப்சா தவறு என்று மெசேஜ் வரும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டும். கேப்சாவும் சரியாக இருந்து உள்ளே சென்றால் மீண்டும் பணம் செலுத்துதலில் தாமதம்... அப்போதும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அதையும் கடந்து பணம் செலுத்துவதற்குள் நேரம் கடந்து விடும். டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு போய் விடுகிறது.
தட்கல் முன்பதிவை பொறுத்தவரை துவங்கியதில் இருந்து 2 நிமிடத்திற்குள் முன்பதிவு முடிந்தால் தான் டிக்கெட் கிடைக்கும். குறிப்பாக அதிகம் வரவேற்புள்ள தென் மாவட்டங்கள் - சென்னை ரயில்களில் ஒன்றரை நிமிடத்திற்குள் முடிய வேண்டும்.
ஆனால் அண்மைக்காலமாக இது சாத்தியமில்லாததாக மாறி வருகிறது. ஆனால் ஏஜன்ட்களிடம் கொடுத்தால் டிக்கெட் கிடைத்து விடுகிறது.
இதற்கு ஒரே தீர்வு ரயில்வே இணையதளத்தை வேகப்படுத்துவது மட்டுமே. இதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு, பயணிகளுக்கு இனிமையான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
- நமது நிருபர் -