ADDED : மே 25, 2025 01:33 AM

சென்னை:விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகை வழங்குவதற்காக, எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு, 98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்கிறது. இதனுடன் ஊக்கத்தொகை வழங்கி, கொள்முதல் விலையை, மாநில அரசு நிர்ணயம் செய்கிறது.
கடந்த, 2024 - 25ம் ஆண்டு அரவை பருவத்தில், 14 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், 18.8 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இவற்றில், 11 சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க, 133 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
நிலுவைத்தொகை வழங்கவும், 2025 - 26ம் ஆண்டு அரவை பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு, 221 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, அரசுக்கு சர்க்கரை துறை இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.
இதை பரிசீலித்த அரசு, சேலம், தர்மபுரி, வேலுார், செங்கல்வராயன், திருத்தணி, எம்.ஆர்.கே., செய்யாறு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு, 97.7 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்துள்ளார்.