கைதிகள் தப்பிய சம்பவத்தில் கண்காணிப்பாளர் ‘சஸ்பெண்ட்’
கைதிகள் தப்பிய சம்பவத்தில் கண்காணிப்பாளர் ‘சஸ்பெண்ட்’
UPDATED : அக் 31, 2026 07:26 PM
ADDED : அக் 31, 2026 07:24 PM
தேனி: தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தில், சிறை கண்காணிப்பாளரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தேனி மாவட்ட சிறையில், அக்., 26ம் தேதி இரவு, 17 கைதிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி தப்பினர். போலீசார் துரிதமாக செயல்பட்டு, 17 கைதிகளையும் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், கண்காணிப்பு பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு, பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவற்றில் கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
தேனி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக, துணை சிறை அலுவலர் நாகேஸ்வரன் கவனித்து வந்தார். அவர், சிறை கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாட்டு பணிகளில் உரிய கவனம் செலுத்தாததால், மறு உத்தரவு வரும் வரை, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது. சிறைத்துறை அலுவலர்கள் தங்கள் பொறுப்புகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும். பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தால், மதுரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், பொறுப்பேற்ற 11 நாளில் சேலத்திற்கு இடமாற்றப்பட்டார். டி.ஜி.பி., மற்றும் கண்காணிப்பாளரை தொடர்ந்து தங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என, ஐ.ஜி., கனகராஜ், டி.ஐ.ஜி., முருகேசன் ஆகியோரும் கலக்கத்தில் உள்ளனர்.
