ADDED : மார் 18, 2025 07:02 AM

சென்னை : ''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, சபாநாயகர் சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அதனால் தான் அவரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அவரது பேட்டி:
தி.மு.க., ஆட்சியில், பல்வேறு பிரச்னைகள் தலை துாக்கியுள்ளன. அவற்றை சட்டசபையில் எடுத்து வைக்க வேண்டியது கடமை. சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தின மீது, நான் பேசியதை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. முதல்வர் பேசியதை நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.
இதைதான் ஒருதலைபட்சம் என்கிறோம். கருமேனியாறு - நம்பியாறு திட்டம் குறித்து, கே.பி.முனுசாமி பேசும்போது, சபாநாயகர் குறுக்கிடுகிறார். நான் அந்த தொகுதியை சேர்ந்தவன் என்கிறார். அப்படி என்றால், அவர் ஆளுங்கட்சி வரிசையில் இருந்துதான் பதில் சொல்ல வேண்டும்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வெற்றி குறித்து கவலைப்படவில்லை.
எது நியாயம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக, தீர்மானம் கொண்டு வந்தோம்.
பன்னீர்செல்வத்திற்கு சபாநாயகர் சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான், அவரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.