போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது
ADDED : மே 06, 2025 03:25 AM

அரக்கோணம் : அரக்கோணத்தில், எம்.ஆர்.எப்., தொழிற்சாலை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில், நுழைவாயில் முன் கூட்டம் நடத்த முயன்ற, எம்.எல்.ஏ., ரவி உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்துாரில், எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இங்கு பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுவரை தொழிற்சாலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நுழைவாயில் முன் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலர் கமலக்கண்ணன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் தொழிற்சாலையின் நுழைவாயில் முன் போராட்டம் நடத்த குவிந்தனர். போலீசார் அனுமதி மறுத்து, அனைவரையும் கைது செய்தனர்.
உடனடி மின்சப்ளை!
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலை 3:00 மணி அளவில், அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில், ஐந்து மணி நேரத்திற்கு மின் தடை ஏற்பட்டது.
பொதுமக்களின் புகாரையடுத்து, அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவி, மோசூர் துணைமின் நிலையத்திற்கு சென்று, மின் ஊழியர்களிடம் மின்தடை குறித்து கேட்டார். அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக மின் சப்ளை வழங்கினர்.
அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்!
அரக்கோணம் அருகே, எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தற்காலிக தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவாக, எம்.ஆர்.எப்., ஆலை முன், அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவி, முன்னாள் எம்.பி., ஹரி உள்ளிட்டோர் வந்தனர். அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கியுள்ளனர்.
இதற்காக, எம்.எல்.ஏ., ரவி உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரை, போலீசார் கைது செய்துள்ளனர். இதைக் கண்டிக்கிறேன். இப்படி, எத்தனை அடக்குமுறைகளை தி.மு.க., அரசு ஏவினாலும், அதை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,