அரசியலமைப்பின் பாதுகாவலனாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் பேச்சு
அரசியலமைப்பின் பாதுகாவலனாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் பேச்சு
ADDED : அக் 27, 2025 12:54 AM

சென்னை: ''நீதித்துறையின் உள்கட்டமைப்பு, கட்டட கலையை மட்டுமல்லாது நீதியையும் சார்ந்தது,'' என, உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், 134 ஆண்டுகள் பழமையான சட்டக்கல்லுாரி கட்டடம், கூடுதல் நீதிமன்ற கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
வழி நடத்தும் சட்ட கல்லுாரியின் பாரம்பரிய கட்டடம், சென்னை உயர் நீதிமன்றத்தின் இணை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புராதன கட்டடம், நீதித்துறை பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். மாணவர்களை கற்றலில் ஊக்குவித்த இந்த கட்டடம், இனி நீதிபதிகள், வக்கீல்களை வழிநடத்தும்.
சென்னை உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாக திகழ்கிறது. நீதித்துறையின் உள்கட்டமைப்பு என்பது, கம்பீரமான கட்டடக்கலை சார்ந்தது மட்டுமல்ல, அது நீதியையும் சார்ந்தது.
ஏனெனில், சாமானிய மக்களுக்கு, வேகமாக, நியாயமான நீதி கிடைக்க, நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் உகந்த சூழல் அமைய வேண்டும்.
அப்போது தான், அவர்கள் பொறுமை, கருணை, தெளிவு கொண்டிருக்க முடியும். நீதித்துறைகளுக்கான கட்டமைப்பு, பொது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ''நீதித் துறையை வலிமைப்படுத்த, மாநில அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வாயிலாக, மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடிமக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க, பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,'' என்றார்.
உறுதிபூண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசும் போது, ''அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் சட்டம் படித்த பலர், இதே இடத்தில், நீதிபதிகளாகவும், வக்கீல்களாகவும் பணியாற்ற உள்ளனர். இந்த கூடுதல் நீதிமன்றங்கள், பொதுமக்களுக்கு நீதியை விரைவாக வழங்க வழிவகை செய்யும் என, நம்புகிறேன்,'' என்றார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்,''பொது மக்களுக்கு நியாயமான நீதி கிடைத்திட, தேவையான நீதித்துறை கட்டமைப்புகளை உருவாக்கிட தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது,'' என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றார்.
விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ரமேஷ், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

