இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள்!: கோவையில் பிரதமர் மோடி ஊக்க உரை
இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள்!: கோவையில் பிரதமர் மோடி ஊக்க உரை
UPDATED : நவ 19, 2025 11:55 PM
ADDED : நவ 19, 2025 11:47 PM

கோவை :''இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் அனைத்து விவசாயிகளும், 'ஒரு ஏக்கர் ஒரு பருவம்' என்ற முறையைப் பின்பற்றி, இயற்கை விவசாயத்தை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தில், உலகிற்கே முன்னோடியாக திகழ வேண்டும்,'' என விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில், இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
என் உரையை துவக்குவதற்கு முன், விவசாயிகளிடமும் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பை கோர விரும்புகிறேன். தவிர்க்க இயலாத சூழலில், புட்டபர்த்தியில் காலதாமதம் ஆகிவிட்டதால் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
ஒரு முக்கிய விஷயத்தை பகிர விரும்புகிறேன். விவசாய சங்க தலைவர் பாண்டியன் அருமையாக பேசினார்.
அவரது உரை தமிழில் இருந்ததால், முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. 'சிறு வயதில் தமிழையும் கற்றிருக்கலாமே...' என அடிக்கடி நினைப்பதுண்டு.
இன்று பாண்டியனின் உணர்வுபூர்வமான உரையை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அந்த உணர்வு என்னை தொட்டது. அவரின் உரையை ஹிந்தி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பும்படி கவர்னரிடம் கோரியுள்ளேன்.
நான் மேடைக்கு வந்தபோது, பல விவசாயிகள் தங்களின் மேல்துண்டை சுழற்றிக் கொண்டிருந்தனர். பீஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் அளவளாவியது.
கோவை என்ற இந்த புனித மண்ணில், மருதமலையில் குடிகொண்டிருக்கும் முருகனை, நான் முதன்மையாக தலை வணங்குகிறேன். கோவை கலாசாரம், கனிவு, கவின் படைப்புத்திறன் ஆகியவற்றைத் தனக்கு சொந்தமாக்கி கொண்ட பூமி. இந்த நகரம், தென் பாரதத்தின் தொழில்முனைவு ஆற்றலின் சக்தி பீடம்.
தன் ஜவுளித்துறையால் தேசத்தின் பொருளாதரத்துக்கு பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் கோவை, தற்போது மேலும் ஒரு காரணத்தால் சிறப்பு பெறுகிறது. இங்கே எம்.பி.,யாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று துணை ஜனாதிபதியாக நம் அனைவருக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
இயற்கை விவசாயம் விசேஷமானது. என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. இம்மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளைச் சென்று பார்த்தேன். மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்றவரும், இஸ்ரோவில் சந்திரயான் திட்டத்தில் பணிபுரிந்தவரும் அந்தந்த வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்துக்கு வந்துள்ளனர்.
இவர்களின் பணி, ஊக்கம் அளிக்கிறது. மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து, புதிய உத்திகளையும் வழிமுறைகளையும் கைக்கொண்டு வேளாண் தொழிலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
ஒருவேளை இங்கே வராமல் இருந்திருந்தால், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் போயிருப்பேன். என் கற்றல் குறைந்துபோயிருக்கும்.
வரும் ஆண்டுகளில் பாரதத்தின் வேளாண் துறையில் பல மாறுதல்கள் ஏற்பட இருக்கிறது. பாரதம், உலகளாவிய இயற்கை விவசாயத்தின் மையப்புள்ளியாக மாறும் பாதையில் பயணிக்க துவங்கி இருக்கிறது.
நமது பல்லுயிர்ச்சூழல் புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இளைஞர்களும் தற்போது விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியுள்ளனர். இதனால், ஊரக பொருளாதாரம் மேம்படும் என அறுதியிட்டு சொல்ல முடியும்.
கடந்த, 11 ஆண்டுகளில் தேசத்தின் ஒட்டுமொத்த வேளாண் துறையிலும் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நமது வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயத்தை நவீனப்படுத்த தேவையான அனைத்து வழிகளையும் விவசாயிகளுக்கு அரசு திறந்துவிட்டிருக்கிறது.
வேளாண் கடன் அட்டை - -- கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக மட்டும் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கால்நடை பராமரிப்பாளர்களுக்கும், மீன் வளர்ப்போருக்கும் வேளாண் கடன் அட்டை கிடைத்திருப்பதால், அவர்களும் நிறைவான பயனடைந்துள்ளனர். உயிரி உரங்கள் மீதான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த மேடையில் இருந்து சற்று முன்னர், தேசத்தின் அனைத்து மூலையில் இருக்கும் விவசாயிகளுக்கும், 21வது தவணையாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' வழங்கப்பட்டிருக்கிறது.
இயற்கை வேளாண்மையை பரவலாக்குவது என்பது, 21ம் நுாற்றாண்டு வேளாண்மையின் தேவை. தேவை அதிகரிப்பால், வயல்களில் ரசாயனங்களின் பயன்பாடு விரைவாக அதிகரித்து வருகிறது.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிக பயன்பாடு காரணமாக, மண் வளம் குறைகிறது. மண்ணின் ஈரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாகுபடி செலவினமும், ஒவ்வோராண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வு என்னவெனில், பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே.
மண் வளம் பொருட்டும், பயிர்களின் ஊட்டச்சத்தின் நீள் உயிர்ப்பின் பொருட்டும், இயற்கை வேளாண் பாதையில் நாம் முன்னேறியே ஆக வேண்டும். இதுவே நம் தொலைநோக்கு; அத்தியாவசிய தேவையும் கூட. அப்போதுதான் வரும் தலைமுறைக்கு நமது உயிரி பன்முகத்தன்மையை பாதுகாத்து அளிக்க முடியும்.
இயற்கை வேளாண்மையானது, சூழல் மாற்றம், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நமக்கு பேருதவியாக, மண் வளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இம்மாநாடு இந்த இலக்கில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கவுள்ளது.
நமது அரசு, பாரத்தின் வேளாண் பெருமக்கள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள ஏராளமாக ஊக்கமளித்து வருகிறது. இயற்கை விவசாய தேசிய இலக்கை தொடங்கி வைத்ததால் லட்சோபலட்சம் விவசாயிகள் ஒன்றாக இணைய முடிந்தது.
இதன் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை, மொத்த தென்பாரதத்திலும் காண முடிகிறது. தமிழகத்திலும் 35 ஆயிரம் ஹெக்டர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண்மை, பாரதத்தின் சொந்தமான சுதேசி கருத்து. இதை நாம் எங்கிருந்தும், யாரிடமிருந்தும் பெறவில்லை. இறக்குமதி செய்யவில்லை. நம் பாரம்பரியத்தில் பிறந்தது. நம் சுற்றுச்சூழலுக்கு உவப்பானது, உகந்தது.
தென்னிந்திய விவசாயிகள் இயற்கை வழி வேளாண்மையின் பாரம்பரியங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்றவற்றை நிரந்தரமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இயற்கை வேளாண்மையோடு சிறுதானியங்களைப் பயிர் செய்வதையும் இணைக்க வேண்டும். இவை பூமித்தாயின் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை செய்கின்றன.
நம் தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு, தேனும் தினைமாவும் நிவேதனப் பொருட்களாகப் படைக்கிறோம். தமிழகத்தில் கம்பும், சாமையும், கேரளா, கர்நாடகாவில் ராகி, தெலுங்கு மக்களிடம் சப்ஜா, ஜொன்னா ஆகியவை பல தலைமுறைகளாக நம் உணவுப் பழக்கத்தோடு ஒன்றுகலந்தவை.
நம்முடைய அரசின் முயற்சி என்னவெனில், நமது இந்த சூப்பர் உணவானது, உலக சந்தைக்கு சென்று சேர வேண்டும். அதற்கு இயற்கை வேளாண்மை, ரசாயனமற்ற வேளாண்மை ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.
எனவேதான், இம்மாநாட்டில், இதோடு தொடர்புடைய விவாதங்கள் நடைபெறவேண்டும் என விரும்புகிறேன். ஒற்றைப் பயிருக்கு பதிலாக, பல்வகைப் பயறு வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே எனது ஆழ்ந்த விருப்பம். இதற்கான கருத்தாக்கம், உத்வேகம் தென்பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நமக்குக் கிடைக்கிறது.
கேரளாவிலும், கர்நாடகத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் பல்லடுக்கு வேளாண்மை செய்யப்படுகிறது. ஒரே வயலில் தென்னை, பாக்கு, பழ மரங்கள் இருக்கும்; ஊடுபயிராக மசாலா பொருட்கள், மிளகு போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. சிறிய இடத்தில் இத்தனை பயிர்களை விளைவிக்க முடியும். இதுதான் இயற்கை வேளாண்மையில் அடிப்படைக் கோட்பாடு.
இந்த வேளாண் மாதிரியை, இந்தியா முழுக்க கொண்டு செல்ல விரும்புகிறோம். இதை செயல்படுத்த வேண்டும் என மாநிலங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்.
தென்னிந்தியா, விவசாயத்தின் வாழும் பல்கலையாக விளங்கி வருகிறது. உலகின் மிகப் பழமையான, இன்றும் செயல்பட்டு வரும் அணைகள் இப்பகுதியில் உள்ளன. 13ம் நுாற்றாண்டில் காலிங்கராயன் கால்வாய் உருவாக்கப்பட்டது. கோவில்களில் பரவலாக்கப்பட்ட நீர் சேகரிப்பு முறைகள், குளங்கள் நீர்நிலைகள் முன் மாதிரியாக விளங்குகின்றன.
இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவியல் பூர்வமாக நீர்ப் பொறியியல் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் தேசத்திலும் சரி, உலகிலும் சரி, இயற்கை வேளாண்மைக்கு தலைமை ஏற்பது எனில், அது இந்த நிலப்பகுதிதான் என்பது என் அசையாத நம்பிக்கை.
வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக, வருங்கால விவசாய சூழல் அமைப்பினை உருவாக்க, நாம் அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும். நம் நாட்டின் அனைத்து விவசாயிகள், தமிழக விவசாய பிரதிநிதிகளாக கூடியிருக்கும் வேளாண் துறை சகோதர சகோதரிகளான நீங்கள் அனைவரும், 'ஒரு ஏக்கர்- ஒரு பருவம்' என்பதில் இருந்து தொடங்குங்கள்.
அதாவது, ஒரு பருவத்தில், ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்குங்கள்; அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பயன்களைப் பொறுத்து, இயற்கை விவசாயத்தை விரிவாக்கம் செய்யுங்கள்.
இயற்கை விவசாயத்தை, வேளாண் பாடத்திட்டத்தில் முக்கியமான அங்கமாக்குங்கள். கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளின் வயல்களை உங்களின் பரிசோதனைக் கூடங்களாக மாற்றுங்கள் என அறிவியலாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் எப்படியாவது இயற்கை விவசாயத்தை, அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தின் இந்த இயக்கத்தில், மாநில அரசுகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் மன்றங்களின் பங்களிப்பு மகத்தானது. கடந்த சில ஆண்டுகளில், 10 ஆயிரம் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாகியிருக்கின்றன.
உழவர் உற்பத்தியாளர் மன்றங்களின் உதவியோடு, விவசாயிகளின் சிறு சிறு குழுக்களை உருவாக்கியிருக்கிறோம். இவர்களுக்கு சுத்திகரித்தல், பதப்படுத்துதல், சிப்பமிடல் போன்ற வசதிகளைச் செய்து தர வேண்டும். மின்னணு சந்தை, இணையவழி சந்தையில் நேரடியாக இணைக்க வேண்டும். இதன் வாயிலாக இயற்கை விவசாயிகளுக்கு மேலும் லாபம் கிடைக்கும் சாத்தியம் உண்டாகும்.
நமது விவசாயிகளின் பாரம்பரியமான ஞானம், அறிவியலின் பலம், அரசு ஆதரவு என்ற இம்மூன்றும் இணையும்போது, விவசாயிகள் வளம்பெறுவர், தன்னிறைவு அடைவர். நம் பூமித்தாயும் ஆரோக்கியமாக இருப்பாள்.
எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. மிகப்பெரிய நம்பிக்கை. இம்மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு புதிய திசையைக் காட்டும். இங்கு பிறக்கும், புதிய கருத்துகள் எண்ணங்கள் மூலமாக புதிய தீர்வுகள் பிறக்கும். அந்த நம்பிக்கையோடு உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

