வி.ஏ.ஓ.,க்களுக்கு கைகூடாத தாசில்தார் பதவி; பதவி உயர்வு விகிதாசாரத்தை மாற்ற வலியுறுத்தல்
வி.ஏ.ஓ.,க்களுக்கு கைகூடாத தாசில்தார் பதவி; பதவி உயர்வு விகிதாசாரத்தை மாற்ற வலியுறுத்தல்
UPDATED : ஏப் 10, 2025 01:12 AM
ADDED : ஏப் 10, 2025 01:08 AM

மதுரை: 'வருவாய்த்துறையில் ஒரே கல்வித்தகுதியில் பணிநியமனம் பெற்றும், இளநிலை உதவியாளர்களுக்கும் தங்களுக்கும் பதவி உயர்வில் பாரபட்சம் உள்ளதால், தாசில்தார் கனவு நனவாகாமலேயே போய்விடுகிறது'' என வி.ஏ.ஓ.,க்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 4 தேர்வு மூலம் வருவாய்த்துறைக்கு வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே கல்வித்தகுதி, ஒரே ஊதியத்தில் பணிநியமனம் பெறுகின்றனர்.
இருப்பினும் பதவி உயர்வில் பாரபட்சமான நிலைமை உள்ளதால் வி.ஏ.ஓ.,க்கள் தாசில்தார் பதவியை அடையமுடியாமல் தவிப்பில் உள்ளனர். அதேசமயம் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் விரைவான பதவி உயர்வால் தாசில்தார், துணை கலெக்டர் நிலை வரை உயர்ந்து விடுகின்றனர்.
பாரபட்சமான பதவி உயர்வு
வருவாய்த்துறையில் மாநில அளவில் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். இவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பில் 70 சதவீதமும், அதேசமயம் 12 ஆயிரத்து 500 வி.ஏ.ஓ.,க்களுக்கு 30 சதவீதமும் வழங்கப்படுகிறது.
இந்த கூடுதல் வாய்ப்பால் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் 2, 3 ஆண்டுகளிலேயே முதுநிலை வருவாய் ஆய்வாளர் தகுதியைப் பெற்று, அடுத்த 10 ஆண்டுகளில் துணைத்தாசில்தார், தாசில்தார் நிலைக்கு வந்து, அதன்பின் சிலர் துணை கலெக்டராகவும் ஆகிவிடுகின்றனர்.
ஆனால் வி.ஏ.ஓ.,க்கள் அடுத்த நிலையான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வை 12 ஆண்டுகளுக்குப் பின்பே எட்டுகின்றனர். அதன்பின் ஒவ்வொரு நிலையையும் தாண்டி, ஓய்வு வயதுக்குள் தாசில்தார் பதவியை பெற முடியாமல் போகிறது.
வருவாய்த்துறை சங்கங் களின் கூட்டமைப்பு தீர்மானக்குழு தலைவர் ஜெயகணேஷ் கூறுகையில், ''பதவி உயர்வில் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாசாரம் அமைய வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் உள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு 70 சதவீதமும், இளநிலை உதவியாளர்களுக்கு 30 சவீதமும் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் வி.ஏ.ஓ.,க்களுக்கும் கீழான நிலையில் உள்ள பதிவுரு எழுத்தர்கள் கூட (ரெக்கார்டு கிளர்க்) தாசில்தார் ஆகிவிடுகின்றனர்.
இந்த நிலையை தவிர்க்க வி.ஏ.ஓ.,க்களையும் இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுடன் ஒருங்கிணைத்து பணிமூப்பு வழங்க வேண்டும்'' என்றார்.