தட்டச்சு பள்ளிகளுக்கு 'தமிழ் 99' கட்டாயம் நடைமுறை சிக்கலால் தேர்வர்கள் தவிப்பு
தட்டச்சு பள்ளிகளுக்கு 'தமிழ் 99' கட்டாயம் நடைமுறை சிக்கலால் தேர்வர்கள் தவிப்பு
ADDED : டிச 07, 2025 01:50 AM
சென்னை: தட்டச்சு பள்ளிகளுக்கு, 'தமிழ் 99' விசைப்பலகை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசின் புதிய நடைமுறையால், 'மாணவ - மாணவியர்' பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற் பட்டு உள்ளது.
தமிழகத்தில், தட்டச்சு தேர்வுகள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கின்றன. கடந்த 1971ம் ஆண்டு முதல், தொழில்நுட்ப கல்வித் துறை, தட்டச்சு தேர்வுகளை நடத்தி வருகிறது.
எழுத்துப்பிழை இந்நிலையில், சமீபத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், 'டைப்ரைடிங்' இயந்திரத்தில், தட்டச்சு தேர்வை நடத்துவதற்கு பதிலாக, கணினியில் நடத்த தீர்மானித்தது. இது, 2026ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2027 முதல் தேர்வு நடத்தப்படும் என, அறிவித்தது.
தட்டச்சு தேர்வு எழுத, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, 'தமிழ் 99' என்ற விசைப்பலகையை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, 'செய்யாதது' என்ற வார்த்தையை தட்டச்சு செய்யும் போது, 'செய்யாத்து' என்று வருகிறது. இது போல், பல சிக்கல்கள் உள்ளன.
இதனால், வேகத்தேர்வின் போது, குறைந்த நேரத்தில், இவற்றை எல்லாம் கவனிப்பது சாத்தியமில்லை என, தட்டச்சு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
குழப்பம் இது குறித்து, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
'தமிழ் 99' குறித்த விளக்கக் குறிப்புகள் குழப்பமானதாக உள்ளன. இதை வேகத்தேர்வுக்கு பயன்படுத்துவது கடினம். இயந்திர தட்டச்சு முறையில், தட்டச்சு செய்வது எளிமையாக இருந்தது.
ஆனால், 'தமிழ் 99' விசைப்பலகையில் அவ்வாறு இல்லை. மாணவர்கள் யோசித்து, வார்த்தைகளை பிரித்து, தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது. பின், சரியான வார்த்தை வருகிறதா என பார்த்து கவனித்து, தட்டச்சு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, வேகத்தேர்வுக்கு 'தமிழ் 99' பயன்படாது. இதில் உள்ள சிக்கல்களை அரசு சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், இயந்திர தட்டச்சு முறையை கடைப்பிடிக்க, அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

