வழக்காடும் மொழியாக தமிழ்; உண்ணாவிரதத்துக்கு அனுமதி
வழக்காடும் மொழியாக தமிழ்; உண்ணாவிரதத்துக்கு அனுமதி
UPDATED : பிப் 10, 2024 03:28 AM
ADDED : பிப் 10, 2024 02:10 AM

சென்னை:வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பிப்., 28 முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில் 'உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகில் டிச. 20 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டது. அதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த உத்தரவை ரத்து செய்து உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளை கருதி அனுமதி மறுத்ததாகவும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிப்., 27ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே கலந்து கொள்ள இருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கமான நிபந்தனைகளுடன் பிப்., 28 முதல் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.