பயிர் காப்பீடு செய்ய நவ., 30 வரை அவகாசம் தேவை மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை கடிதம்
பயிர் காப்பீடு செய்ய நவ., 30 வரை அவகாசம் தேவை மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை கடிதம்
ADDED : நவ 16, 2025 01:38 AM
சென்னை: சாகுபடி செய்யப்பட்டுஉள்ள பயிர்கள், மழையின்றி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், காப்பீடு செய்வதற்கு, 30ம் தேதி வரை, மத்திய அரசிடம் அவகாசம் கேட்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்., 16ம் தேதி துவங்கியது. இதை பயன்படுத்தி, பல்வேறு மாவட்டங்களில், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
விவசாயிகளின் சாகுபடி தேவைக்கு, பல அணைகளில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது திறக்கப்பட்டுள்ள நீர், பிரதான ஆறுகள், கால்வாய்கள் வழியாக மட்டுமே பயணித்து வருகின்றன. இதனால், அணைகளில் திறக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லை.
வடகிழக்கு பருவமழை ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில், மழையை நம்பி, மானாவாரி நிலங்களில், பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
அக்டோபர் மாத இறுதியில் உருவான, 'மோந்தா' புயல் காரணமாக, கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் ஆந்திராவில் கரையை கடந்தது.
இதை தொடர்ந்து, 15 நாட்களாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போக்கு காட்டி வருகிறது.
மழையை நம்பி சாகுபடி செய்த பயிர்கள், பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பல மாவட்டங்களில், பயிர் பாதிப்பு அபாயம் உருவாகி உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, பயிர் காப்பீட்டிற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்பார்ப்பு இது குறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சம்பா பருவ பயிர் காப்பீட்டிற்கான, அவகாசம் முடிந்து விட்டது. ஆனால், காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை, 30ம் தேதி வரை நீட்டித்து தர வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும்படி, மத்திய வேளாண் துறைக்கு, மாநில வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி, இயக்குநர் முருகேஷ் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து, சாதகமான பதில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

