மத்திய அரசு அனுமதி அளித்த பட்டாசு ஆலைகளில் அதிக விபத்து; தீர்ப்பாயத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு
மத்திய அரசு அனுமதி அளித்த பட்டாசு ஆலைகளில் அதிக விபத்து; தீர்ப்பாயத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 30, 2025 06:50 AM
சென்னை: மத்திய அரசின், 'பெசோ' எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் அனுமதி அளித்த பட்டாசு ஆலைகளில்தான் அதிக விபத்துகள் நடப்பதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 2023ல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில், பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இதை விசாரித்த தீர்ப்பாயம், ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை மூடுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், 'தீர்ப்பாயத்தின் உத்தரவில், 320 பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட, 22 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
' பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசின், 'பெசோ' நிறுவனத்தின் அனுமதி முக்கியம். 'பெசோ' அனுமதி அளித்த பட்டாசு ஆலைகளில்தான் அதிக விபத்துகள் நடந்துள்ளன' என்றார்.
அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ஆகஸ்ட் 19ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தார்.