ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு
ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு
UPDATED : ஆக 21, 2025 10:28 AM
ADDED : ஆக 21, 2025 03:32 AM

சென்னை: வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்ததற்கு போட்டியாக, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை, தீபாவளி நாளில் தமிழக அரசு வெளியிட உள்ளது.
இதற்கு, 10,000 கோடி ரூபாய் தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் கட்சியான தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இதற்காக, வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வரும் பொங்கலுக்கு கார்டுதாரர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாகவே டில்லியில் சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, அறிவித்தார்.
இந்த அறிவிப்பை பற்றி தான் தற்போது பலரும் பேசி வருகின்றனர். அதனுடன் போட்டி போடும் வகையில், பொங்கலுக்கு இரு மாதங்களுக்கு முன்பே, அதாவது அக்டோபரில் தீபாவளி சமயத்தில், பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட உள்ளது.
இதனால் அரசுக்கு, 10,000 கோடி ரூபாய் செலவாகும். அதற்கான நிதி திரட்டும் பணிகளில் கவனம் செலுத்தி, அவசியம் இல்லாத செலவுகளை குறைத்து, நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.