நகரங்களுக்கு இணையாக கிராமங்கள் வளர்ச்சி: தமிழக அரசு பெருமிதம்
நகரங்களுக்கு இணையாக கிராமங்கள் வளர்ச்சி: தமிழக அரசு பெருமிதம்
ADDED : ஜூன் 29, 2025 02:17 AM
சென்னை:'இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தை உயர்த்தி நிலை நிறுத்திட, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான்கு ஆண்டுகளில், 8,000 கோடி ரூபாயில் 20,000 கி.மீ., சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 7,000 கோடி ரூபாயில் 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமான பணிகள், பல்வேறு நிலைகளில் உள்ளன.
நகரங்களை ஒட்டிய 690 ஊராட்சிகளுக்கு 69 கோடி ரூபாய்; மலைப்பிரதேசங்களில் உள்ள 278 கிராம ஊராட்சிகளுக்கு 30 கோடி ரூபாய் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 10,187 கிராம ஊராட்சிகளில், 69,760 பணிகள், 4,277.32 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 5,000 சிறு பாசன ஏரிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப, 3,194 சிறு பாசன ஏரிகள் 213.07 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள் சார்பில், 706 சிறு பாசன ஏரிகள், 45.39 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் சிறப்பு திட்டத்தின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், 1.11 கோடி வீடுகளுக்கு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 13.81 லட்சம் வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டங்களால், தமிழகத்தின் கிராமங்கள் நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று, இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.
இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.