'மத்திய தொகுப்பு மின்சாரத்தால் தமிழகம் மின் மிகை மாநிலம்'
'மத்திய தொகுப்பு மின்சாரத்தால் தமிழகம் மின் மிகை மாநிலம்'
ADDED : அக் 27, 2024 02:34 AM
சென்னை:''மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவதால், தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது,'' என, மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்தார்.
மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால், தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. புதிதாக அமைக்கப்படும் அனல் மின் நிலைய பணிகள் மற்றும் 8,932 கோடி ரூபாயிலான மறுசீரமைப்பு மின் வினியோக திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது. பின், மத்திய அமைச்சர் மனோகர் லால் அளித்த பேட்டி:
'கார்பன்' வாயிலாக ஏற்படும் மாசை தடுக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2070க்குள் கார்பன் மாசு இல்லாத நாடாக, இந்தியாவை மாற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மின் திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் சிறப்பான முயற்சிகளை எடுக்கின்றன.
மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் நடவடிக்கையால், தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை, 'பிரீபெய்டு' மீட்டர் திட்டத்துடன் இணைக்கும் முறை வேண்டாம் என்றும், ஏற்கனவே இருக்கும் முறையே தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில், பிரீபெய்டு முறையை கொண்டு வந்து அதில் மின் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கி, விரிவாக்க அறிவுறுத்தி உள்ளோம்.
வீடுகளில் கூரை சூரியசக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை எடுக்கிறது. சூரியசக்தி மின் நிலையத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது என்றார்.