புயல் நிவாரண நிதியை உடனடியாக தர வேண்டும் பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை
புயல் நிவாரண நிதியை உடனடியாக தர வேண்டும் பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை
ADDED : டிச 03, 2024 07:20 PM
''தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பெஞ்சல் புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டது. மக்கள் வீடிழந்து, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்' என, பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தனர்.
பெஞ்சல் புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரண நிதி கோரி, தமிழக எம்.பி.,க்கள் நேற்று பார்லிமென்ட்டில் பேசியதாவது:
லோக்சபாவில் ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு பேசியதாவது:
தமிழகத்தின் 14 மாவட்டங்கள் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் முற்றிலுமாக சீர்குலைந்து போயுள்ளன. இதுகுறித்து, தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புயலால், 1.5 கோடி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 2,416 குடிசைகளும், 721 வீடுகளும் நாசமாகியுள்ளன. 963 கால்நடைகள் பலியாகி விட்டன. 9,576 கி.மீ., துாரத்திற்கு சாலைகளும், 1,847 பாலங்களும், 417 கிராம கிணறுகளும், 1,649 கி.மீ.,தொலைவு மின் பாதைகளும், 5,936 பள்ளி கட்டடங்களும் சேதமடைந்துள்ளது. இவற்றை சரி செய்வதற்கு, தமிழக முதல்வர் கோரியுள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பேசுகையில், ''ஆடு-மாடுகள், பள்ளிகள், அங்கன்வாடி கட்டடங்கள் என மிகப்பெரிய சேதாரத்தை பெஞ்சல் புயல் ஏற்படுத்தி உள்ளது. நிவாரண நிதி கேட்டு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தை வஞ்சிக்கும் தவறை, மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது. ஏற்கனவே நடந்த புயல்களின் போதும், 43,993 கோடி ரூபாய் கேட்டிருந்தும், 1,729 கோடி ரூபாய்தான் மத்திய அரசு தந்துள்ளது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், ''தமிழகத்தில் புயல் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. எனவே, தமிழக முதல்வர் கோரியுள்ள நிவாரண நிதியை காலம் தாமதிக்காமல் உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்,'' என்றார்.
ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி., அப்துல்லா பேசுகையில், ''சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெஞ்சல் புயலால் பெருமளவு பாதிக்கப்பட்டு சாலைகள், ரயில் பாதைகள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் சேதாரமடைந்து விட்டன. உடனடியாக மத்திய அரசு, 2,000 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கிட வேண்டும். மத்திய குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,'' என்றார்.
ம.தி.மு.க., - எம்.பி.,வைகோ பேசுகையில், ''பெண்கள், குழந்தைகள் என பலரும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. விளைவித்த பழங்களையும், காய்கறிகளையும், விற்க முடியாத நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. உடனடியாக, பேரிடர் மீட்பு குழுவை உள்துறை அமைச்சர் தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும்,'' என்றார்.
அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, தமிழக புயல் பாதிப்புகள் குறித்து சபையை ஒத்திவைத்துவிட்டு, விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அளித்திருந்தார். அதில், 'தமிழகத்தில் புயல் பாதிப்புகள் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் கடலோர மாவட்டங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது' என குறிப்பிட்டிருந்தார். இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு ஏற்கப்படவில்லை. என்றாலும், ஜீரோ நேரத்தின்போது தமிழகத்தின் பிற எம்.பி.,க்கள், பேசிய விபரங்களை தாமும் வலியுறுத்துவதாக தம்பிதுரை கூறினார்.
- நமது டில்லி நிருபர் -