ADDED : ஜன 05, 2024 10:47 PM
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, வயலில் மது குடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். பொது இடங்களில் மது குடித்தது மட்டுமின்றி, அதை தட்டிக் கேட்டவரை கொல்லும் அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த படுகொலைக்கு, தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மது குடிப்பதை முழு நேரத் தொழிலாக மாற்றியிருப்பது,தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளின் சாதனை. தர்மபுரி மட்டுமல்ல, தமிழகம் முழுதும் இதே அவலம் தான் நீடிக்கிறது. மதுவும், போதையும் தமிழகத்தின் பொது அடையாளங்களாகி விட்டன. பேரழிவுப் பாதையில்தமிழகம் வேகமாக வெற்றிநடை போடுகிறது.
இதுதான் திராவிட மாடலா என்பதை, தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்காமல், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதாலோ, ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்த இலக்கு நிர்ணயிப்பதாலோ, எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்.