தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
ADDED : ஜூன் 03, 2025 11:27 AM

அரியலூர்: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
அரியலூரில் அவர் அளித்த பேட்டி விவரம்: இரண்டொரு நாட்களாக தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற செய்தி வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தவறானது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். அப்போது இதுகுறித்து மக்களின் கருத்தைக் கேட்டு தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது.
அந்த அடிப்படையில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கையினால் பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து நீதிமன்றத்திடம் தான் வழங்கப்படும்.
அங்கு அரசினுடைய கருத்தை கேட்கும் போது பொது மக்களுக்கு சுமையில்லாத வகையில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து வைக்கப்படும்.
ஏற்கனவே மின் கட்டணம் உயர்வு இருக்கும் என்று செய்தி இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின் கட்டண உயர்வு இருக்காது என்று தெளிவுபடுத்தச் சொன்னார், அதை தெளிவுபடுத்தினோம். அந்த வகையில் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்படாது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.