முதியோர் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இனி வீட்டிற்கே!
முதியோர் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இனி வீட்டிற்கே!
UPDATED : ஆக 13, 2025 12:44 AM
ADDED : ஆக 13, 2025 12:38 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பயனாளிகளின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டு தாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை, சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி சக்திவேல் வீட்டிற்கு நேரில் சென்று, அவருக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். பின், கோபால் நகரைச் சேர்ந்த சரஸ்வதி, தேவிகா, மீனாட்சி ஆகிய முதியவர்களின் வீடுகளுக்கும் சென்று பொருட்களை வழங்கி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நுாலகத்தை பார்த்தார்
அப்போது அங்கிருந்த புனித இருதய மெட்ரிக் பள்ளி மாணவியர் திரண்டு நின்று கைதட்டி, முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். அங்கிருந்தவர்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அங்கு, தி.மு.க.,வினர் அமைத்துள்ள கருணாநிதி நுாலகத்தையும் ஸ்டாலின் பார்வையிட்டார். பின், பல்வேறு பகுதிகளில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை, ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை, அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் துவக்கி வைத்தனர். அதன்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை ஒ.புதுார் ஊராட்சியிலும், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சிந்தலவாடம்பட்டி ஊராட்சியிலும், பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர்.
21.70 லட்சம் பேர்
அரசு வழங்கும் பல்வேறு சேவைகள், மக்களின் வீடு தேடி சென்றடையும் வகையில், மாநிலம் முழுதும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன், உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
இத்திட்டம் மூலம், 34,809 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்தின் வாயிலாக, மின்னணு எடை தராசு, விற்பனை முனைய கருவி உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய வாகனங்களில், ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளின் வீடுகளில் வினியோகம் செய்யப்படும்.
பயன்பெற தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் விபரம், உணவு துறையிடம் இருந்து பெறப்பட்டு, ரேஷன் ஊழியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசுக்கு ஆண்டுக்கு, 36 கோடி ரூபாய் செலவாகும்.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பயனாளிகளின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அதற்கு முன்னரே, அவர்களுக்கு பொருட்கள் தேவைப்பட்டாலும், கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
பொருட்களை எடுத்து வரும் போது, வீட்டில் ஆட்கள் இல்லை என்றால், கடைக்கு வந்து பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகள் விபரம் சரிபார்க்கப்பட்டு, புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ஏற்ப, கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.