UPDATED : நவ 01, 2026 09:34 PM
ADDED : நவ 01, 2026 06:48 PM

திருநெல்வேலி:
திருநெல்வேலியில், டாஸ்மாக் கடைகளை பூட்டி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில், 'ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது' என வலியுறுத்தி, பணிகளை புறக்கணித்த ஊழியர்கள், மதுபானக் கடைகளை பூட்டி, சாவிகளை திருநெல்வேலி டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனால், வழக்கமாக மதியம், 12:00 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மதுபானம் வாங்க முடியாமல், மதுப்பிரியர்கள் தவித்தனர்.
இதனால் அவர்கள், தனியார் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்களில் குவிந்தனர். திருநெல்வேலி டவுன் கண்ணன் சாலை, திருவனந்தபுரம் - திருச்செந்துார் சாலையில் உள்ள வி.எம்.சத்திரம் மனமகிழ் மன்றத்தில் கூட்டம் அதிகரித்ததால், தற்காலிகமாக மதுபான விற்பனை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
