காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் பிரச்னையை கேட்க குழு அமைத்தது 'டாஸ்மாக்'
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் பிரச்னையை கேட்க குழு அமைத்தது 'டாஸ்மாக்'
ADDED : செப் 02, 2025 02:06 AM
சென்னை: மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் ஏற்படும் பணிச்சுமை உள்ளிட்டவை தொடர்பாக,ஊழியர்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை, 'டாஸ்மாக்' நிறுவனம் அமைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, 'டாஸ்மாக்' அமல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, கடைகளில் மது பாட்டில் விற்கும் போது, அதன் அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும். பாட்டிலை திரும்ப வழங்கியதும் கூடுதலாக பெற்ற தொகை திரும்ப தரப்படும். இத்திட்டத்தால், கடை ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக நிர்வாகத்திற்கு தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
எனவே, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால், ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை அறியவும், அதை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான யோசனை வழங்கவும், மண்டல அளவில் குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது.
அதன்படி, சென்னை மண்டலத்திற்கு, முதுநிலை மண்டல மேலாளர் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், திருவள்ளூர் மேற்கு, சென்னை மத்திய மாவட்ட மேலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதேபோல, கோவை, மதுரை, சேலம், திருச்சியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்களிடம் கருத்து கேட்டு, அதை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசகேரன் கூறுகையில், ''காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு, தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும். கடைகளில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். அதன்பின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.