டாஸ்மாக் முறைகேடு விவகாரம்; தமிழக பா.ஜ., நாடகமாடுகிறது: விஜய் கட்சி குற்றச்சாட்டு
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்; தமிழக பா.ஜ., நாடகமாடுகிறது: விஜய் கட்சி குற்றச்சாட்டு
ADDED : மார் 18, 2025 07:01 AM

சென்னை : 'டாஸ்மாக் மோசடி விவகாரத்தில், நாடகமாடுவதை விடுத்து, மேல் நடவடிக்கை எடுங்கள்,' என, த.வெ.க., செயலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்தது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக, அமலாக்கத்துறை துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்ததாக தெரியவில்லை.
அமலாக்கத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், மத்திய பா.ஜ., ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.,வினர், மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்த முயல்வது யாரை ஏமாற்ற? எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம். தங்களை எதிரிகள்போல் காட்டிக்கொண்டு, மறைமுக கூட்டணி வைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக, உண்மையான விசாரணை நடக்க வேண்டும். தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.