வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபடுவதால் பள்ளி கல்வி பணி பாதிப்பு: ஆசிரியர்கள் புலம்பல்
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபடுவதால் பள்ளி கல்வி பணி பாதிப்பு: ஆசிரியர்கள் புலம்பல்
ADDED : நவ 16, 2025 01:46 AM
சென்னை: 'தமிழகத்தில் நடக்கும், எஸ்.ஐ.ஆர்., என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு அரையாண்டுக்கான பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது' என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்படுகிறது.
நிர்பந்தம் தமிழகத்தில் இப்பணியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், 50 சதவீதம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில், 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள்.
ஒவ்வொரு ஆசிரியரும், 1,500 வாக்காளர்களுக்கு படிவங்கள் வினியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காலை, 10:00 முதல், இரவு 7:00 மணி வரை இந்தப் பணி தொடர்கிறது.
இப்பணிகளை இந்த மாதத்துக்குள் முடித்து, அடுத்த மாதம், 4ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால், ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், இரண்டுக்கும் மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவர்களை தினமும் கையாளுகின்றனர்.
மேலும், பள்ளி சார்ந்த பணிகள், தரவு உள்ளீட்டு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு நெருங்குவதால், அனைத்து மாணவ - மாணவியருக்கும் புரியும் வகையில் கற்பித்து, அவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் புலம்புகின்றனர்.
நெருக்கடி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, சென்னை மாவட்ட செயலர் சாந்தகுமார் கூறியதாவது:
அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், வயது வித்தியாசம் இல்லாமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதில், சில ஆசிரியர்கள் வேறு பள்ளியில் மாற்று பணியில் உள்ளனர்.
ஒருபுறம் ஆசிரியர்கள் இல்லாமல், மாணவ - மாணவியரையும், பெற்றோரையும் சமாளிக்க முடியாத நிலையில், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டுள்ளோர், ஒரே மாதத்துக்குள் பணியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் நெருக்கடிக்கும் உள்ளாகின்றனர்.
மாணவ - மாணவியர் நலன் கருதி, விடுமுறை நாட்களில் மட்டும் ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

