அரசு பள்ளிகளின் தரம் உயர்வு; அறிவிப்பில் ஆசிரியர்கள் ஏமாற்றம்; ஹெச் .எம்., பதவி உயர்வு சிக்கலுக்கும் இல்லை தீர்வு
அரசு பள்ளிகளின் தரம் உயர்வு; அறிவிப்பில் ஆசிரியர்கள் ஏமாற்றம்; ஹெச் .எம்., பதவி உயர்வு சிக்கலுக்கும் இல்லை தீர்வு
ADDED : ஏப் 26, 2025 03:45 AM
மதுரை : கல்வித்துறை மானியக்கோரிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட பள்ளி தரம் உயர்வு அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் (ஹெச்.எம்.,) பதவி உயர்வு சிக்கல் குறித்தும் எவ்வித கொள்கை முடிவு அறிவிப்பும் இல்லை என அதிருப்தி எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் 4 தொடக்க, 14 நடுநிலை, 20 உயர்நிலை பள்ளிகள் மட்டும் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 2023 - 2024 பட்ஜெட்டில் 8 மேல்நிலை, 4 உயர்நிலை, 9 தொடக்க பள்ளி என 21 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு குறித்து இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே தற்போதைய அறிவிப்பில் முந்தைய 21 பள்ளிகளும் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து தெளிவில்லை.
மாநில அளவில் உயர்நிலையாக தரம் உயர்த்த தலா ரூ. 1 லட்சம் முன்வைப்பு தொகை செலுத்தி 150க்கும் மேற்பட்ட பள்ளிகளும், மேல்நிலையாக தரம் உயர்த்த தலா ரூ.2 லட்சம் செலுத்தி 100க்கும் மேற்பட்ட பள்ளிகளும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றன.
இந்நிலையில் 2024 - 2025ல் அரசு பள்ளிகள் தரம் உயர்வு தொடர்பான அறிவிப்பு இல்லை. இந்தாண்டும் அந்த அறிவிப்பு இல்லை என்றால் விமர்சனம் எழும் என்பதால் பெயரளவில் குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதித்துள்ளனர்.
நீடிக்கும் குழப்பம்
இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் தான் ஆசிரியர்கள்,அலுவலர்கள் நியமிக்கப்படுவர். குறிப்பாக கிராமப் பகுதி மாணவர்கள் இடைநிற்றல் தவிர்க்கப்படும். அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்வுக்காக காத்திருக்கும் போது இவ்வாறு குறைந்த எண்ணிக்கையிலான அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் விபரம் மே மாதம் வெளியிட்டு, ஜூனில் செயல்படும் வகையில் நடவடிக்கை வேண்டும்.
இதுபோல் பதவி உயர்வுக்கு டி.இ.டி., கட்டாயம், பி.ஜி., ஆசிரியர்களுக்கு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க கூடாது போன்றவை குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள்உள்ளன. இதனால் பதவி உயர்வு தடைபட்டு ஆயிரக்கணக்கான அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.
'டி.இ.டி., தேர்வு தகுதி பதவி உயர்வுக்கு தேவையில்லை' என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துஉள்ளது. ஆனால் அதுதொடர்பாக எவ்வித வழிகாட்டுதல் உத்தரவுகளும் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அதுபோன்ற குழப்பங்கள் நீடிக்கின்றன.
இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கான அறிவிப்புகள் இல்லை. குழப்பமான சூழலில் தான் இன்னும் கல்வித்துறை செயல்படுகிறது என்றனர்.