ஆசிரியர்கள் பாடம் புகட்டுவர்: அரசுக்கு நயினார் எச்சரிக்கை
ஆசிரியர்கள் பாடம் புகட்டுவர்: அரசுக்கு நயினார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 03, 2025 01:55 AM

சென்னை: 'ஆசிரியர்கள் கோரிக்கைகளை, தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தி.மு.க., அரசுக்கு ஆசிரியர்கள், தேர்தலில் பாடம் புகட்டுவர்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு பள்ளிகளில் உள்ள, ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்படி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6,553 இடங் களுக்கு, இடைநிலை ஆசிரியர் தேர்வு ஆணையம், 2023 - 24ல் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்ற, 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி நியமனம் வேண்டி காத்துக் கிடக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் காலியிடமும், அதற்கு தகுதியான ஆசிரியர்களும் தயாராக உள்ள நிலையில், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில், அரசுக்கு என்ன சிக்கல்.
தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஏற்புடையதா? ஒருவேளை ஒருவரை நியமிக்க, இத்தனை லட்சம் ரூபாய் வேண்டும் என, இதிலும் ஊழல் நடத்த திட்டமா?
தற்போது, 50 வயதை கடந்து, அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை, ஆட்சியின் இறுதி காலத்திலாவது நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லையா?
ஆசிரியர்கள் கோரிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தி.மு.க., அரசு, அதற்கான விளைவுகளை சட்டசபை தேர்தலில் அறுவடை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.