'அவனுங்கள செய்ய சொல்லு செலவ நாம பார்த்துக்கலாம்!'
'அவனுங்கள செய்ய சொல்லு செலவ நாம பார்த்துக்கலாம்!'
ADDED : அக் 29, 2024 11:50 PM

சென்னை, அக். 30-
'அவனுங்கள செய்யச் சொல்லு; செலவை நாம பார்த்துக் கொள்ளலாம்' என, மகனிடம் ரவுடி நாகேந்திரன் கூறியதாக குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டு உள்ளர். இவர், வேலுார் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட, 30 பேர் மீது, எழும்பூர் நீதிமன்றத்தில், 5,000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரவுடி நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் சேர்க்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
என் மகன் அஸ்வத்தாமன், இளைஞர் காங்கிரசில் முக்கிய பதவியில் இருந்தார். அவரின் அரசியல் வளர்ச்சிக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தார். எங்கள் தொழில் விஷயங்களிலும் தலையிட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும் இருந்தார். அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தியதாக, என் மகன் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம்ஸ்ட்ராங்கே காரணம்.
என் மகனும், ஜெயபிரகாசும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களுக்குள் நடந்த பிரச்னையில், ஆம்ஸ்ட்ராங் தலையிட வேண்டிய அவசியம் என்ன? இதனால், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் ஒருவரை அழைத்து, 'என் மகனுக்கு ஏதாவது ஆச்சுனா, நான் எந்த லெவலுக்கும் போவேன்' என்று, எச்சரித்தேன்.
பின், 'என் மகன் அரசியலில் வளர்வது உனக்கு பிடிக்கவில்லையா' என, சிறையில் இருந்தபடி, ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு திட்டினேன். அவர் நக்கலாக சிரித்தார்.
இந்நிலையில் தான், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தேன். அந்த நேரத்தில், மகன் அஸ்வத்தாமன் என்னை சந்தித்தார்.
அப்போது, ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்க, வழக்கறிஞர் அருள் தன்னை சந்தித்ததாக, என்னிடம் கூறினார். 'இது தான் நல்ல சந்தர்ப்பம். அவனுங்கள செய்யச் சொல்லு; செலவ நாம பார்த்துக்கொள்ளலாம்' என்று, கூறினேன். ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்க, ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டு உள்ளது.