ADDED : பிப் 06, 2025 01:26 AM
சென்னை,:இரவு, அதிகாலை வேளைகளில் குளிர் காற்று வீசினாலும், பகல் நேரத்தில் தமிழகத்தில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாகக் காணப்படும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
வடகிழக்கு பருவக் காற்று முற்றிலுமாக விலகிய நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.
இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேரத்தில் வெப்ப நிலை இயல்பை விட, 2 முதல், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். காலை வேளையில், லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக, ஜன., மாதத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்தாலும், மார்ச் மாதத்தில் தான் வெயில் அதிகரிக்கத் துவங்கும். இந்த ஆண்டு பிப்., முதல் வாரத்திலேயே வெப்ப நிலை படிப்படியாக உயர துவங்கியுள்ளது. இது கோடைக்காலம் முன்கூட்டியே துவங்குவதை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது.