உதயநிதிக்காக கோவில் பணம் செலவழிக்கப்படவில்லை: சேகர்பாபு
உதயநிதிக்காக கோவில் பணம் செலவழிக்கப்படவில்லை: சேகர்பாபு
ADDED : நவ 05, 2024 07:36 PM
சென்னை:வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, கல்வி மையம் அமைப்பதற்காக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று களஆய்வு மேற்கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஒரு தொகுதிக்கு ஒரு நுாலகம் என சென்னையின் பல இடங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.
திராவிட மாடல் தி.மு.க., அரசு வசைப்பாடுபவர்களைப் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை. வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற அளவிற்கு எங்களுடைய மக்கள் பணி இருக்கும். இப்படித்தான் எங்களை முதல்வர் பணியாற்றச் சொல்லி இருக்கிறார்.
'அரசுப் பணி மற்றும் கட்சி விழாக்களுக்காக துணை முதல்வர் உதயநிதி தஞ்சாவூருக்கு செல்கிறார். அவரை வரவேற்க, கோவில் பணம் செலவிப்படுவதாக பா.ஜ., தலைவர் ராஜா குற்றம்சாட்டி உள்ளார். அவர் காலை எழுந்தது முதல் இரவு வரை, தி.மு.க., மற்றும் தலைவர்கள் மீது பொல்லாங்கு பேசுவதையே வாடிக்கையாக்கி இருக்கிறார். அவர் குற்றாம்சுமத்தி விட்டார். சொன்னதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் சொல்வது போல, எங்கேணும் நடந்திருந்து, அதற்கான ஆதாரத்தைக் காட்டினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராட்கவே இருக்கிறோம்.
தி.மு.க., அரசு மீது குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால், இப்படியெல்லாம் இல்லாததை சொல்கின்றனர். பொய்யைக் கூட உண்மை போல பேசக்கூடியவர் தான் ராஜா. அதனால் தான், அவரை தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமித்துள்ளனர்.
தெலுங்கர்கள் குறித்து கொச்சையாகப் பேசி விமர்சித்தார் என நடிகை கஸ்தூரி மீது குற்றச்சாட்டு உள்ளது. யார் என்ன கருத்தை சொல்கின்றனர் என்பதை விட, எந்தக் கருத்தையும் சொல்லும் நபர் யார் என்று பார்க்க வேண்டும். பெரு மழை பெய்தால், எப்படி குப்பை அடித்துச் செல்லுமோ, அதைப் போல கஸ்தூரி போன்றவர்களெல்லாம் அரசியல் பெரு மழையில் அடித்துச் செல்லப்படுவர். அவர் குறித்தெல்லாம் பேசி, பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.