சென்னை – கோவை – துாத்துக்குடி விரைவு சாலைக்கு ‘டெண்டர்’
சென்னை – கோவை – துாத்துக்குடி விரைவு சாலைக்கு ‘டெண்டர்’
UPDATED : நவ 21, 2026 06:57 PM
ADDED : நவ 21, 2026 06:54 PM

சென்னை: சென்னை – கோவை – துாத்துக்குடி தொழில் வழித்தட விரைவு சாலை திட்டம் குறித்து ஆய்வு நடத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை, ‘டெண்டர்’ வெளியிட்டுள்ளது.
‘தமிழகத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியை வலுவூட்டும் வகையில், முக்கிய தொழில் பகுதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மையங்களை இணைக்க, சென்னை, துாத்துக்குடி மற்றும் கோவை நகரங்களை இணைக்கும், தொழில்தட விரைவு சாலை அமைக்கப்படும்’ என, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது.
இதை செயல்படுத்துவதற்கான, சாத்திய கூறு ஆய்வுகள் நடத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை ‘டெண்டர்’ வெளியிட்டுள்ளது.
இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை திட்டத்தை தயாரிப்பதற்கும், சென்னை, கோவை – துாத்துக்குடி நகரங்களை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள, தொழில் வழித்தட விரைவு சாலைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ளவும், ‘டெண்டர்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை, எட்டு அல்லது 10 வழி சாலையாக அமையும். இந்த வழித்தடம் பயண நேரத்தையும், சரக்கு போக்குவரத்து செலவுகளையும் குறைப்பதோடு, தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
