மின் கொள்முதலுக்கு அனுமதி பெறாத டெண்டர்கள்: தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
மின் கொள்முதலுக்கு அனுமதி பெறாத டெண்டர்கள்: தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : பிப் 16, 2025 03:25 PM

சென்னை: அனுமதி பெறாத டெண்டர்களை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க., அன்புமணி அறிக்கை:
தமிழ்நாட்டில் கோடைகால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, டெண்டர்களை மின்வாரியம் கோரியிருக்கிறது.
மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆட்சியாளர்களின் சுயலாபத்திற்காக அரசும், மின்வாரியமும் எப்படியெல்லாம் விதிகளை வளைக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.
மின்சார வாரியம் எந்த விஷயத்திலும் அத்துமீறி செயல்படக்கூடாது என்பதற்காகவும், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் தங்களின் விருப்பப்படி ஒப்பந்தப்புள்ளிகளை கோரி விட்டு, அதன்பிறகு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இது சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும்.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை. இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு என்று கூறி, அந்த ஆணையத்தை எல்லையில்லா அதிகாரம் பெற்ற அமைப்பைப்போன்ற தோற்றததை அரசும், மின்சார வாரியமும் ஏற்படுத்துகின்றன.
ஆனால், மின்சாரக் கொள்முதல் போன்ற தங்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். இதே போக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்து, அது விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

