மணல் கடத்தலை தெரிவித்ததால் வாலிபர் மீது பயங்கர தாக்குதல்
மணல் கடத்தலை தெரிவித்ததால் வாலிபர் மீது பயங்கர தாக்குதல்
ADDED : செப் 10, 2024 06:21 AM
கிருஷ்ணகிரி: மணல் கடத்தல் குறித்து தகவல் அளித்தவர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, நுாற்றுக்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகாரளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி பஞ்., நல்லாகவுண்டனுாரை சேர்ந்தவர், கூலி தொழிலாளியான பெருமாள், 32.
இவர் கடந்த, 4ல், நல்லாகவுண்டனுார் பாம்பாற்றிலிருந்து, அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்பவர், பொக்லைன், டிராக்டர் மூலம் மணல் திருடுவதை, வீடியோ எடுத்து, ஊத்தங்கரை போலீசுக்கு அனுப்பினார்.
போலீசார் அந்த வீடியோவை, சின்னதம்பி மற்றும் அவரது மகன்கள் மாது, சுப்பிரமணிக்கு அனுப்பினர்.
இதையடுத்து சின்னதம்பி, அவர் மனைவி உஷா மற்றும் அவர்களது இரு மகன்கள், இரும்பு கம்பியால், பெருமாளை தலையில் தாக்கினர். தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கினர்.
படுகாயமடைந்த பெருமாள், உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பெருமாள் குடும்பத்தினரை, சின்னதம்பி தரப்பினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
போலீசிடம் கொடுக்கப்பட்ட வீடியோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றது எப்படி என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

