வெறும் 3 பேராசிரியர்களுடன் செயல்படும் தமிழக அரசின் 4 மருந்தியல் கல்லுாரிகள் மாணவர்கள் கல்வி தரம் பாதிக்கும் அபாயம்
வெறும் 3 பேராசிரியர்களுடன் செயல்படும் தமிழக அரசின் 4 மருந்தியல் கல்லுாரிகள் மாணவர்கள் கல்வி தரம் பாதிக்கும் அபாயம்
ADDED : செப் 20, 2025 01:57 AM
தமிழகத்தில் உள்ள நான்கு அரசு மருந்தியல் கல்லுாரிகளில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒரு இணை பேராசிரியர் மட்டும் உள்ளனர்; 24 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது.
சென்னை, மதுரை, கோவை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மருந்தியல் படிப்புகளுக்கான கல்லுாரிகளும் தனியாக இயங்கி வருகின்றன.
அவற்றில், பி.பார்ம்., - டி.பார்ம்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.பார்ம்., போன்ற மருந்தாளுனர் படிப்புகள் உள்ளன. அதே நேரம், மற்ற அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருந்தாளுனர் படிப்புகள் இல்லை.
மேலும், மருந்தாளுனர் படிப்புகளுக்கான ஒன்பது பேராசிரியர் பணியிடங்களில், ஏழு இடங்கள் காலியாக உள்ளன. தற்போது, இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
அதேபோல, இணை பேராசிரியர் பணியிடங்கள் 18ல், 17 காலியாக உள்ளன.
உதவி பேராசிரியர்களை வைத்து மட்டுமே, நான்கு மருந்தியல் கல்லுாரிகளும், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.
இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசு கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கவும் பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
குற்றச்சாட்டு அதே நேரம், தனியார் மருந்தியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, 110 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே, 10 மருந்தியல் கல்லுாரிகள் தனியாரால் துவக்கப்பட்டு உள்ளன.
ஆனால், அரசு மருந்தியல் கல்லுாரிகளை மேம்படுத்தவோ, இடங்களை அதிகரிக்கவோ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் செயல்பாடு, தனியார் கல்லுாரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது என, மருந்தியல் பேராசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து, அரசு மருந்தியல் பேராசிரியர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 110 தனியார் மருந்தியல் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், 10,000க்கும் மேற்பட்ட பி.பார்ம்., - டி.பார்ம்., - எம்.பார்ம்., - பிஹெச்.டி., - பார்ம் டி., போன்ற படிப்புகள் உள்ளன.
அதேநேரம், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் இருந்தாலும், அவற்றில் நான்கு கல்லுாரிகளில் மட்டுமே மருந்தியல் படிப்புகள் உள்ளன.
இவற்றிலும், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மருந்தியல் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க முடியவில்லை.
கடந்தாண்டே, மருந்தியல் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது. இப்படியே தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் அரசு கல்லுாரிகளில் மருந்தியல் படிப்புகள் இல்லாத நிலை ஏற்படும்.
மேலும், சென்னை, மதுரை மருந்தியல் கல்லுாரிகளில் தலா, 60 என, மொத்தம் 120 பி.பார்ம்., படிப்புகள் உள்ளன. இவற்றில் தலா, 100 இடங்களை அதிகரிக்க முடியும்.
60 ஆண்டுகளுக்கு மேல் ஆனால், பேராசிரியர் பணியிடங்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருப்பதால், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும், 10க்கும் மேற்பட்ட தனியார் மருந்தியல் கல்லுாரிகள் வருகின்றன. ஆனால், 60 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு மருந்தியல் கல்லுாரியை கூட அரசு ஏற்படுத்தவில்லை.
இதனால், பெரும்பாலான மாணவர்கள், தனியார் கல்லுாரியில் ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலுத்தி படித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -