ADDED : மே 15, 2025 02:16 AM
சென்னை:'மத்திய அரசால் வழங்கப்பட்ட, கால்நடை ஆம்புலன்ஸ்கள் பழுதடையவில்லை. கால்நடை மருத்துவர்கள்தான் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்' என, ஆம்புலன்ஸ்களை இயக்கும், இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்கிய, 60 ஆம்புலன்ஸ்கள் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இது தொடர்பாக, இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் அளித்துள்ள விளக்கம்:
கால்நடை ஆம்புலன்ஸ்கள் பழுதானால், இரண்டு நாட்களுக்குள் பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
இதுவரை கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாயிலாக, 12.34 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளன. நாள் ஒன்றுக்கு 20 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது 216 கால்நடை மருத்துவர்களை தேர்வு செய்ய, டி.என்.பி.சி., சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராவதற்காக, கால்நடை ஆம்புலன்ஸ்களில் பணிபுரிந்த கால்நடை மருத்துவர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.