எரிவாயு மின் நிலையம் செயல்படாததால் வாரியத்துக்கு ரூ.43 கோடி கூடுதல் செலவு
எரிவாயு மின் நிலையம் செயல்படாததால் வாரியத்துக்கு ரூ.43 கோடி கூடுதல் செலவு
ADDED : டிச 11, 2024 12:07 AM
ராமநாதபுரம் வழுதுார் எரிவாயு மின் நிலையம், இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, 95 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய துவக்கப்பட்டது.
கடந்த, 2020 நவ., 26ல் மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது. சேதங்கள் கடுமையாக இருந்தன. மின் நிலையத்தின் அனைத்து முக்கிய பாகங்களையும் மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இதை, 37 நாட்களுக்குள் சரிசெய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், 230 நாட்களானது. கூடுதல் பழுது, பராமரிப்பு செலவு செய்ததால், மின் வாரியத்துக்கு, 16.41 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
ஆலை நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால், 'கெயில்' நிறுவனத்திடம் இருந்து ஒப்புக்கொண்ட அளவுக்கு, இயற்கை எரிவாயுவை பயன்படுத்த முடியவில்லை.
இதனால், அந்நிறுவனத்துக்கு, 2021 அக்டோபரில், 22.53 கோடி ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டது. மேலும், 4.06 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்தப்பட்டது.
வழுதுார் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாததால், நான்கு மாதங்களில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து மின்சாரம் வாங்கியதால், மின்வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.
இந்த வகையில், 43 கோடி ரூபாய் கூடுதல் செலவாகி உள்ளது.

