420 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் விவசாயிகளிடம் வாங்குகிறது வாரியம்
420 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் விவசாயிகளிடம் வாங்குகிறது வாரியம்
ADDED : பிப் 08, 2024 01:54 AM
சென்னை:தமிழக விவசாயிகளிடம் இருந்து, 420 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, பி.எம்., - கே.யு.எஸ்.யு.எம்., எனப்படும் பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களின் நிலத்தில் தனியாகவோ அல்லது பல விவசாயிகளுடன் கூட்டு சேர்ந்தோ, சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்பனை செய்யலாம்.
இதனால், மழை இல்லாமல் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டாலும், மின்சாரம் விற்பனையால் ஆண்டு முழுதும் வருவாய் கிடைக்கும்.
தற்போது, பிரதமரின் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, 420 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே, பிரதமரின் திட்டத்தின் கீழ், இரு விவசாயிகளிடம் இருந்து, 3 மெகா வாட் மின்சாரத்தை ஒரு யூனிட், 3.28 ரூபாய்க்கு வாங்க, சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 420 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது.
ஒருவர் தனித்து அல்லது கூட்டாக சேர்ந்து, 2 மெகா வாட் திறன் வரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம். அவர்களிடம் இருந்து, 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

