கொடைக்கானலில் புதர் மண்டிய அப்பர் லேக் வியூ பகுதி: சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
கொடைக்கானலில் புதர் மண்டிய அப்பர் லேக் வியூ பகுதி: சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
ADDED : ஜன 24, 2025 01:55 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் பராமரிப்பின்றி சேதமடைந்து புதர் மண்டிய நிலையில் உள்ள அப்பர் லேக் வியூக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அப்பர்லேக் வியூ மையம் 2008 ல் ரூ. 17 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, பயணிகள் ஏரியின் முழு தோற்றத்தை கண்டு களிக்க தொலைநோக்கி நிலையமும் அமைக்கப்பட்டது.
இதற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டது.
சில ஆண்டுகள் முறையாக செயல்பட்ட தொலை நோக்கி நிலையம் நகராட்சியின் மெத்தன போக்கால் பராமரிப்பின்றி ஆண்டு கணக்காக முடங்கி புதர் மண்டி உள்ளது.
ஏரியின் அழகை கண்டு ரசிக்க அமைக்கப்பட்ட கூடார கூரை சேதமடைந்து விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இப்பகுதியில் அள்ளப்படாத குப்பை, சுகாதாரமின்றி சப்ளை செய்யப்படும் குடிநீர், சேதமடைந்த ரோடு, இயற்கை உபாதைக்கு திறந்தவெளியை நாடும் அவலம் போன்ற காரணங்களால் வருகை தரும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். இப்பகுதியில் சர்வ சாதாரணமாக சுற்றி திரியும் காட்டு மாடு நடமாட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் சர்வதேச சுற்றுலா தலத்தில் உள்ள அப்பர் லேக் வியூ மையம் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தருகிறது.
இங்குள்ள தொலைநோக்கி நிலையம், ஏரியின் அழகை கண்டு ரசிக்கும் கூரை அமைப்பை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

