விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார்: பிரேமலதா உருக்கம்
விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார்: பிரேமலதா உருக்கம்
ADDED : மே 11, 2024 04:52 PM

சென்னை: பத்ம பூஷண் விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நிருபர்கள் சந்திப்பில், விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார் என பிரேமலதா தெரிவித்தார்.
நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன. இந்தாண்டு கலைத்துறைக்கு நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து விஜயகாந்துக்கான விருதை, அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
தொண்டர்கள் வரவேற்பு
சென்னை திரும்பிய அவர் இன்று (மே 11) பத்ம பூஷண் விருதை, விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண் கலங்கினார். அவருக்கு பிரமாண்ட மாலையுடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது:
கலைத்துறையில் விஜயகாந்தின் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி உள்ளது. இந்த உயரிய விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
விஜயகாந்த் ஆசிர்வதிப்பார்
விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார். காலம் கடந்து விருது தந்தாலும் அதை மனதார ஏற்கிறோம். விருதை விஜயகாந்த் உயிரோடு இருந்து வாங்கியிருந்தால் மிகப்பெரிய வரமாக இருந்திருக்கும். விண்ணுலகில் இருந்து அனைவரையும் விஜயகாந்த் ஆசிர்வதிப்பார். விஜயகாந்துக்கு டில்லி தமிழ் சங்கம் பாராட்டு விழா நடத்தியது. அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.