நாங்க பி.எச்.டி., அவரு எல்.கே.ஜி: திருமாவளவனை சொல்கிறார் அன்புமணி
நாங்க பி.எச்.டி., அவரு எல்.கே.ஜி: திருமாவளவனை சொல்கிறார் அன்புமணி
UPDATED : செப் 15, 2024 12:21 PM
ADDED : செப் 15, 2024 08:48 AM

மதுரை: ''மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி., படித்துள்ளோம். ஆனால் இப்போது தான் திருமாவளவன் எல்.கே.ஜி., வந்துள்ளார்,'' என பா.ம.க., அன்புமணி தெரிவித்தார்.
மதுரை விமானநிலையத்தில், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: முதல்வரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம். மேடைக்கு மேடை மதுவின் தீமைகளை பேசிய கனிமொழி 3 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறார். போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார். இது எல்லாம் இருக்கிறது அவருக்கு தெரியுமா? அல்லது புரியுமா?
பூரண மதுவிலக்கு
மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் நான்கு முதல் ஐந்து நாட்களில், ரூ. 30 ஆயிரம் கோடி, ரூ. 50 ஆயிரம் கோடி என முதலீடு ஈர்த்து வருகின்றனர். மதுக்கடைகளை உடனடியாக மூடினால், தமிழகத்தின் சூழல் மோசமாகிவிடும் என அமைச்சர் கூறுகிறார். மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருக்கிறார்.
தமிழக இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத நிலையை உருவாக்கியதே திராவிட மாடல். இது மிகவும் மோசமான சூழல், இதனை கண்டிக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில், முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்தாக பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று சொன்னார் ஸ்டாலின்.
போதை பொருள்
இன்று ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். உடனடியாக மதுவிலக்கு கொள்கை அமல்படுத்துங்கள். காலக்கெடு கொடுத்து மதுக்கடைகளை மூடுங்கள்; இளைஞர்களை காப்பாற்றுங்கள். மதுவை விட மோசமான சூழல் போதை பொருட்கள். போதைப்பொருட்கள் எங்கே பார்த்தாலும் கிடைக்கிறது.
கூல் லிப் போன்ற போதை பொருளை ஏன் தடை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி கேட்டுள்ளார். போதைப்பொருள் பள்ளிக்கூடம் அருகில் கிடைக்கிறது. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கூல் லிப் பயன்படுத்துகின்றனர். இது எல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? போலீசார் எதற்கு இருக்கிறார்கள்? போலீசாருக்கு தெரியாமல் எதையும் விற்க முடியாது.
அவரு எல்.கே.ஜி!
பா.ம.க., சமூக நீதிக்காக துவங்கப்பட்ட கட்சி. மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பா.ம.க.,வை சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள். திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்கு எதிராக பேசுகிறார். மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி., படித்துள்ளோம். ஆனால் இப்போது தான் திருமாவளவன் எல்.கே.ஜி., வந்துள்ளார். அவர் தற்போது தான் மது ஒழிப்பு போராட்டம் நடத்த வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.