ADDED : செப் 29, 2025 01:39 AM
கரூர்: ''பொதுமக்கள் உயிரை காப்பாற்ற முடியாத, கரூர் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கரூரில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மின் தடை ஏன்?
தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 64 பேர் இறந்தது, சென்னையில் விமான படை சாகச நிகழ்ச்சியில், 4 பேர் இறந்தது என, தி.மு.க., ஆட்சியில் மரணங்கள் தொடர்கின்றன.
தமிழகத்தில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு சரியான முறையில் அனுமதி வழங்க வேண்டும்.
அப்படி பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், அனுமதி கொடுக்கக்கூடாது. மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதுதான், அரசு மற்றும் அதிகாரிகள் கடமை.
சினிமா நடிகர் தங்கள் பகுதிக்கு வரும்போது, மக்கள் பார்க்கச் செல்வது இயற்கை தான். அதற்காக, பாதுகாப்பு இல்லாமல் செல்வது சரியல்ல.
கரூரில் குறுகிய சாலைப் பகுதி உள்ள வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஆயிரம் சொன்னாலும், உரிய முறையில் கலெக்டர், எஸ்.பி., செயல்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் உயிரை காப்பாற்ற முடியாத, கரூர் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். அப்போது தான் மற்ற அதிகாரிகளுக்கு, அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இந்த கூட்டத்தில் விஷ கிருமிகள் யாரும் இருந்தா ர்களா? கூட்டத்துக்கு மத்தியில் லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது எதற்கு? மின் தடை ஏன் ஏற்படுத்தப்பட்டது? காலணி வீசப்பட்டது ஏன்? இப்படி நிறைய கேள்விகள் உள்ளன.
விசாரணை கமிஷன்
இப்படிப்பட்ட சந்தேகக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்க வேண்டும் என்றால், தீவிர விசாரணை நடத்த வேண்டும். நடந்த சம்பவத்துக்காக, ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விட்டது. விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சொல்லி இருக்கிறார். விசாரணை கமிஷன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
அதனால், சி.பி.ஐ., விசாரணை நடத்த தமிழக அரசு, உடனே உத்தரவிட வேண்டும். அப்போதுதான், நியாயம் கிடைக்கும். தமிழகத்தில், சி.பி.ஐ., விசாரணை நடத்துவதற்கு, தமிழக அரசு அனுமதி பெற வேண்டும் என, உத்தரவு போட்டு உள்ளனர்.
ஆனால், அஜித் குமார் கொலை வழக்கில், தமிழக அரசே சி.பி.ஐ., வசம் வழக்கை மாற்றி இருக்கிறது.
அப்படியென்றால், கரூரில் நடந்திருக்கும் இந்த வழக்கையும் சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும். அதில் என்ன அரசுக்கு தயக்கம்?
த.வெ.க., தலைவர் விஜய், வார இறுதி நாளில் கூட்டம் நடத்தக்கூடாது.
யோசிக்க வேண்டும்
இந்த நாள் விடுமுறை தினம் என்பதால், வீட்டில் உள்ள குழந்தைகளை எல்லாம், மக்கள் கூட்டத்துக்கு அழைத்து வருகின்றனர். மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டும் பிரசாரம் செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதையெல்லாம் விஜய் தீவிரமாக யோசிக்க வேண்டும். பின், பதுகாப்பாக செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் நிரந்தரமாக டி.ஜி.பி., நியமனம் செய்யாமல், பொறுப்பு டி.ஜி.பி., நியமனம் செய்யப்பட்டால் எப்படி பணிகள் சரியாக நடக்கும். கடந்த, நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு அனைத்திலும் தோல்வி அடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.